பெயர் வைத்தலின் முக்கியத்துவம்

பெயர் என்பது ஒருவரின் அடையாளம், ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான ஒன்றும் கூட. “தமிழனென்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா.
தமிழ்தான் என் பேச்சு;
தமிழ்தான் என் மூச்சு;
தமிழதான் என் வாச்சு(watch)”
என்று உரக்கக் கூறுவதனாலோ, அல்லது முகநாலில் இது போன்ற பக்கங்களை ‘like’ செய்வதனாலோ, தமிழுக்கு எந்த ஒரு வளர்ச்சியும் கிடைக்கப் போவதில்லை. நம்மில் பலருக்கும் உள்ள ஒரு சிறிய எண்ணம் – ‘ஏதோ ஒரு வழியில் நம்முடைய மொழிக்கு நம்முடைய பங்களிப்பு இருக்க வேண்டும்’. அதற்கான ஒரு வாய்ப்பு, நம்முடைய குழந்தைக்கு நாம் விரும்புகிற மாதிரியான தூய தமிழில் பெயர் வைத்தலே ஆகும்.

பொதுவான நோக்கம்: “சும்மா பெரியவங்க சொல்லிட்டாங்க, அதனால தமிழ்ல பேரு வெச்சிருவோம்” என்றில்லாமல், அதன் பொருள் புரிந்து வைத்தல் இன்னும் சிறப்பாகும்.

ஒரு வருத்தத்திற்குரிய செய்தி:
தமிழர்களாகிய நாமே தூய தமிழில் பெயர் வைக்கக் கூச்சப் படுகிறோம், மிகவும் கேவலமாக நினைக்கிறோம். ஒரு சில திரைப்படக் காட்சிகள் இதனை ஊக்குவித்திருக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.
ஒரு பிரபல திரைப்படத்தில் ஒரு நடிகர் கூறுவார் “இது அங்கவை, அது சங்கவை. அப்போ இத எங்க வைக்கட்டும்?” என்று கேலி செய்து, “இது அழகான தமிழ்ப்பெய்ர்” என்றும் சொல்லி, அதை இழிவான காட்சியாகக் காண்பிப்பார்கள்.
குழந்தைகள் இது போன்ற காட்சிகளைப் பார்த்தும், வசனங்களைக் கேட்டும் வளர்ந்தால், அவர்களின் மனப்பான்மை என்னவாக இருக்கும்?
‘தூய தமிழில் பெயர் வைத்தால் அது அசிங்கம், மற்றவர்கள் நம்மைக் கேலி செய்வார்கள்’ என்றுதான் நினைப்பார்கள்.

(கசப்பான உண்மை: ஏன்னா, நம்மில் பலர் மத்தவன் என்ன நெனைக்கறான்னும், மத்தவன திருப்தி படுத்தணும்னுதான நம்ம வாழ்க்கைல ஒவ்வொரு செயலையும் செஞ்சுட்டு வர்றோம்).

நம்மில் பலர் நோக்க வேண்டிய செய்தி:
இந்தியாவிலுள்ள இருபத்தொன்பது மாநிலங்களில், தமிழ்நாட்டில் மட்டும்தான், தன்னுடைய பெயருக்குப் பின்னால், சாதிப் பெயரைச் சேர்த்துக் கூறுபவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்.
நடைமுறை வாழ்க்கையில் ஒரு எடுத்துக்காட்டுடன் கூற விரும்புகிறேன். இப்போது நாம் அனைவரும் வகுப்பறையில் இருக்கிறோம். கல்லாரியின் முதல் நாள். கல்லூரி ஆசிரியர் நம் அனைவரையும் சுய அறிமுகம் செய்யுமாறு கூறிக் கொண்டு அமருகிறார். அனைத்து மாணவ மாணவியரும் எழுந்து  தங்களைச் சுய அறிமுகம் செய்து முடித்துவிட்டனர். இறுதியாக நான் எழுந்து “என் பெயர் பூவேந்தன் ஐயர்” என்றோ, அல்லது “பூவேந்தன் முதலியார்” என்றோ, அல்லது “பூவேந்தன் செட்டியார்” என்றோ, அல்லது “பூவேந்தன் வண்ணியர்” என்றோ கூறினால், அடுத்த நொடியே, அவ்வகுப்பிலுள்ள ஆசிரியர் மட்டுமல்ல, அனைத்து மாணவ மாணவியரும் என்னைப் பற்றி எவ்வளவு இழிவாக நினைப்பார்கள் என்று நமக்குத் தெரியும். பதினாறு/பதினேழு வயது மாணவனுக்குத் தெரிகிறது, தன்னுடைய பெயருடன் சாதிப் பெயரையும் சேர்த்துக் கூறினால் அது குறுகிய மனப்பான்மைத்தனம் என்று.
தமிழ்நாட்டில் மட்டும்தான் இவ்வாறு சிந்திக்கும் மக்கள் நிறைவாக உள்ளனர்.

நல்ல பொருள் தரக்கூடிய எந்தப் பெயராக இருந்தாலும், எந்த மொழி சார்ந்த பெயராக இருந்தாலும் வைக்கலாம். தமிழன் என்பதனால், தமிழில் மட்டுமதான் பெயர் வைக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏனென்றால், நம் குழந்தை, நம் விருப்பம்.

எடுத்துக்காட்டாக ஸமஸ்கிருத மொழியில் ஒரு பெயரை எடுத்துக் கொள்வோம்.
ஐஷ்வர்யா. அந்தப் பெயர் மட்டும் அழகானதல்ல, அதன் பொருளும் மிக அழகானது. ‘உலக அழகியோட பெயர். அதனால, அதையே வெச்சிருவோம்’, அப்படின்னு பேரு வைக்கிரவங்கதான் நிறைய இருக்காங்க.
அதன் பொருள் புரிந்து வைப்பவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.
ஐஷ்வர்யா என்றால் ‘வளமை, செழிப்பு. உன்னுடைய வாழ்க்கையில் செழித்துக் கொண்டே இரு‘ என்று பொருள்.

அதே போன்று தமிழில் ‘பூங்குழலி‘ என்னும் பெயரும் அழகாத்தான் இருக்கு. பூக்கள் நிறைந்த கூந்தலுடைய பெண் என்பதே அதன் பொருள்.

இக்காலத்தில் அழகு என்னும் சொல்லை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. ‘Style‘ என்றுதான் கூறுகிறார்கள்.

அபிஷேக்‘ அப்படிங்கற பெயர் ரொம்ப style-ஆ  இருக்கு. அதையே வெச்சிருவோம்.’
சரிதான். அந்தப பெயர் style-ஆ தான் இருக்கு. ‘இனியன்‘ அப்படிங்கற பெயரை வைப்போமே. அதுவும் style-ஆ தான் இருக்கு.
இனிமையானவன் என்று பொருள்.

தூய தமிழில் பெயர் வைப்பதன் மூலம் மற்றொரு பெருமை உள்ளது.
தமிழில் பெயர் வைத்த ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட துறையில் சாதனை புரிந்தால், அல்லது இவ்வுலகில் கண்டறியாத ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்தால், அப்போது அவருடைய பெயர் வெவ்வேறு மொழியிலுள்ள ஊடகங்களில் காண்பிக்கப்படும் அல்லது கூறப்படும். அதைப் பார்த்தவுடன் தமிழ்நாட்டிலுள்ள ஏழு கோடியே இருபது இலட்சம் மக்களுக்கு மட்டுமல்ல, உலகளவிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் ஒரு பெருமை வரும்.

எனவே, நம்முடைய குழந்தைக்கு நமது விருப்பத்திற்கு ஏற்ப நல்ல பொருள் தரக்கூடிய எந்த மொழி சார்ந்த பெயராக இருந்தாலும் வைப்போம்.
தூய தமிழில் வைத்தால் மேலும் நன்று.

                                                           அன்புடன்
                                                     ந.பூவேந்தன்.